உறவாக அமைந்தோர் இனிமை
உணர்த்தாது கசந்தே மொழிய,
உளவாக நினைத்த தன்மை,
உறவைப் போல் கடிதில் நீங்க,
உள்ளத்தில் துயரின் இடத்தை,
கோபம் பிடித்துக் கொண்டு விட,
உவந்தே பேசிடும் நாக்கை,
கொடுஞ்சொற்கள் பற்றி விட,
இன்னது தான் பேசுகிறோம்,
இவரிடத்தில் பேசுகிறோம்,
என்பதெல்லாம் மறக்க,
நாவும் சுட்டுப் பொசுக்க,
முடிவிலே வந்த கனத்த மௌனமும்,
புயல் ஓய்ந்த பின் காண்பதை ஒத்திருக்க,
புயலது விளைக்கும் பெருத்த சேதமும்,
உறவினிடை வந்ததை உணர்ந்திருக்க,
இன்னொரு முறையும் எனக்கே நானும்,
சொல்லிக் கொள்கிறேன், இதனையே!
இனி எத்தகு கடின நிலையது வரினும்,
கடைப்பிடிக்க வேணும் பொறுமையே!
0 comments:
Post a Comment